Saturday, July 2, 2022

பாதாமி பயணம் - குகைக் கோயில்கள்

 பாதாமி பயணம் - குகைக் கோயில்கள்

https://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_9.html https://24x7entertainer.blogspot.com/2012/08/4.html    https://yatrikaone.com/india-2/aihole-durga-temple/
சாளுக்கிய மன்னர்களின் கடைசி தலைநகரான பாதாமியில் நான் இறங்கிய போது விடியற்காலை 5 மணி. குளிர் அரக்கன் மனிதர்கள் அனைவரையும் கம்பளிப் போர்வைக்குள் புதைத்து வைத்திருந்த நேரம்.
பாதாமி நகரம்
பாதாமியின் பழைய பெயர் 'வாதாபி'. சித்தர்கள் காலத்தில் இருந்து புகழ் பெற்ற இடம் இது. வாதாபி,  இல்வலன் என்ற இரண்டு அரக்கர்கள் ஒரு காலத்தில் இங்கு சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த வழியாக போகும் முனிவர்களைக் கொன்று சாப்பிட்டு வந்தார்கள்.

முனிவர்களை ஏமாற்றி விருந்துக்கு அழைத்து, அந்த விருந்தில் வாதாபியே உணவாக மாறி முனிவர்கள் வயிற்றுக்குள் சென்று விடுவான். அதன்பின் இல்வலன் 'வாதாபியே! வெளியே வா!' என்று சொல்வான். உடனே முனிவரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. பிறகு இருவரும் சேர்ந்து இறந்த முனிவரை சாப்பிட்டு விடுவார்கள்.

இப்படித்தான் ஒருமுறை அகத்திய மாமுனி தென்திசை நோக்கி வரும்போது வாதாபி அவரை விருந்துக்கு அழைத்தான். விருந்தை உண்ட அகத்தியரிடம் வாதாபியின் மாயாஜாலம் பலிக்கவில்லை. வாதாபியை வயிற்றுக்குள்ளே ஜீரணித்து விட்டார். வெளியே இருந்த இல்வலனையும் சாம்பலாக்கி விட்டார்.

அகத்தியரின் அற்புத செயலால் அரக்கர்கள் தொல்லையில் இருந்து மக்கள் விடுபட்டனர். ஆனாலும் 'வாதாபி' என்ற அவன் பெயரே ஊருக்கு நிலைத்து விட்டது. பின்னாளில் வந்த மக்கள் ஒரு கொடிய அரக்கனின் பெயரிலா நம் ஊர் இருப்பது என்று நினைத்து, வாதாபியை பாதாமி என்று மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.

முதல் குகைக் கோயில்

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் (கி.பி.543 - 757) சாளுக்கிய மன்னர்களின் தலைநகரம் இந்த பாதாமி தான். 'சாளுக்கியா' என்பது சலுகம் என்ற கன்னட வார்த்தையில் இருந்து வந்தது. 'சலுகம்' என்றால் உள்ளங்கை; பிரம்மாவின் உள்ளங்கையில் இருந்து தோன்றியவர்கள் சாளுக்கியர்கள்; இப்படி தங்களை பெருமையாக அழைத்துக் கொண்டது மன்னர் பரம்பரை.

சாளுக்கியர்கள் கலையில் சளைத்தவர்கள் அல்ல. பாதாமி குகைக் கோயில்களை பார்ப்பதற்கு முன்பு வரை சாளுக்கியர்கள் எனக்கு வரலாற்று பாட புத்தகங்களில் மட்டுமே அறிமுகமாகியிருந்த ஒரு வம்சம். ஆனால் பாதாமி நகரில் அமைந்திருந்த பாதாமி குகை கோயில்கள், கோட்டைகளை பார்த்தப்பின் என் மனதில் சாளுக்கியர்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள். என்னவொரு கலையம்சம்!  எல்லாமே கலைகளின் உச்சம்!

அகஸ்திய ஏரி
கோட்டையும் குகைக் கோயில்களும் அமைந்திருக்கும் இடமே மனதை அள்ளிப் போகிறது. மூன்று பக்கமும் உயர்ந்து நிற்கும் மலைகள். நாலாவது பக்கம் பாதாமி நகரம். நடுவில் பிரமாண்டமான அகஸ்திய தீர்த்தம், அதுவே அசத்தல்தான்!

குளத்தில்  இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லா பக்கங்களிலும் அமைந்திருந்தன. இப்படி ஒரு அழகு மிக்க இடமாக இது இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

பாறைகள் செம்மண் நிறத்தில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பாறைகளை தமிழ்நாட்டில் பார்ப்பது அபூர்வம். இந்த செந்நிற மலைகளைக் குடைந்து குடைந்தே நான்கு குகைக்கோயில்களை உருவாக்கியிருக்கிறார்கள் சாளுக்கியர்கள். ஒவ்வொன்றுமே பொக்கிஷ­ம்தான்!

குளத்தின் தென்பகுதி மலையில் குகைக்கோயில்கள் வரிசையாக உள்ளன. முதல் குகைக்கோயில் சிவாலயம், மற்ற மூன்று குகைக்கோயில்களோடு ஒப்பிடுகையில் இதுதான் உயரம் குறைவானது. வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து அப்படியே கோயிலுக்குள் செல்லும் விதமாக மிக அருகில் இருக்கிறது. இந்த குகையின் முகப்பில் ஒரு நடராஜர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வேறு எங்கும் பார்க்க முடியாத வடிவம் அது.

84 முத்திரைகள் கொண்ட நடராஜர் சிற்பம் 
ஒரு பக்கத்துக்கு 8 கரங்கள் என்று மொத்தம் 16 கரங்களுடன் பலவித பரத நாட்டிய முத்திரைகளை வெளிப்படுத்தி நிற்கிறார். எந்த இரு கரங்களை ஒன்று சேர்த்தாலும் நாட்டியத்தின் ஒரு முத்திரை கிடைக்கும். இப்படி 84 முத்திரைகளை வெளிப்படுத்தும் சிற்பம் உலகில் வேறு எங்கும் இல்லை.

மண்டபத்துக்குள் சென்றால் மகிஷாசுர மர்த்தினி, கணபதி, கார்த்திகேயன் சிற்பங்கள் உள்ளன. சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஒரு பக்கமும் சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஹரிஹரன் சிற்பம் மறுபுறமும் உள்ளன. எல்லாமே கலையழகு!

இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை நமக்கு விளக்குகிறது. வராக அவதாரம், திரிவிக்ரம அவதாரம் பிரமாதமாக செதுக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது குகைக்கோயில்
மூன்றாவது குகைக்கோயில்தான். நான்கிலும் மிகப்பெரியது; பரவாசுதேவா குகைக்கோயில். கி.பி. 578-ல் முதலாம் புலிகேசியின் மகன் மங்கலேசன் இந்தக் கோயிலை கட்டியிருக்கிறார். முகப்பிலேயே எட்டு கரங்களுடன் மகாவிஷ்ணு நிற்கிறார். அதைக் கடந்து உள்ளே போனால் ஆதிகேசவனின் நாக இருக்கை மேல் பரவாசுதேவர் அமர்ந்திருக்கிறார்.

தூண்களில் தம்பதியர் சிற்பம்
மேற்கூரையில் தம்பதியர் சிற்பம்
தூண்களில் காதல் ரசம் சொட்டும் தம்பதியினரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்தக் குகைக்கோயில்கள் காதலர்களையும் தங்கள் பக்கம் ஈர்த்து விடுகிறது. இங்கு நிறைய காதலர்களைக் காண முடிகிறது.

மகாவீரர்
நான்காவது குகைக்கோயில் தீர்த்தங்கரர் கோயில். சைவ, வைணவ கோயில்களை அமைத்த சாளுக்கியர்கள் சமணத்தையும் விட்டுவிடவில்லை. இந்தக் குகைக் கோயில்தான் இருப்பவற்றில் அளவில் சிறியது. பாகுபலி, பார்ஸ்வா, சிற்பங்களுடன் பெரிய மகாவீரர், சிற்பமும் இங்கு அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த குகைக்கோயில்தான் இருப்பதிலேயே உயரமானது.

குகைக்கோயிலின் உட்புற கலையழகு
குடைந்து உருவாக்கப்பட்ட இந்த குகைக்கோயில்களுக்கு நடுவே இயற்கையாக உருவான ஒரு குகையும் உள்ளது. இந்தக் குகையில் புத்த பிட்சுகள் தியானம் செய்து வந்தனர்.

இப்படியொரு கற்தூணை வேறெங்கும் பார்த்ததில்லை 
சமண குகைக் கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள இடத்தில் இருந்து கீழே தெரியும் பிரமமாண்டமான அகஸ்திய தீர்த்தக் குளமும், இயற்கை அரணாக அமைந்த மலைகளும் பாதாமி நகரையும் பார்ப்பது பேரெழில்! ஏதோ சினிமாவில் வரும் கனவுக்காட்சி போல் அழகோ அழகு! 

  
 



No comments:

Post a Comment